கடந்த திமுக ஆட்சியின் போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. இவர் சாலை அமைக்காமலேயே 3.2 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, கடந்த மாதம் 25-ஆம் தேதி எ.வ.வேலுவின் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், சமீபத்தில் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அழைத்தது. அதற்கு, தான் சிங்கப்பூரில் சிகிச்சையில் இருப்பதாகவும், 10 நாட்கள் கழித்து வந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் எ.வ.வேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் விஜய், திமுகவைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளை கடுமையாக விமர்சித்தார். “கரூர் ஓனர் (செந்தில் பாலாஜி) எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை, ஓடிக்கொண்டே இருக்கிறார். இன்னொருவரோ (எ.வ.வேலு) பயந்து கொண்டு சிங்கப்பூருக்கு ஓடிவிட்டார்” என்று அவர் சாடினார். முதல்வரின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு திமுக தரப்பிலிருந்து தற்பொழுது வலுவான மறுப்பும் பதிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு மிகக் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். “எ.வ.வேலுவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், கடந்த மாதம் 17-ஆம் தேதியே அவர் சிங்கப்பூருக்கு செல்வதற்கான பயணச்சீட்டு (டிக்கெட்) முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தது 25-ஆம் தேதிதான். சோதனைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்துவிட்டுதான் அவர் சிங்கப்பூருக்குச் சென்றார்” என்று விளக்கமளித்தார். மேலும், “உண்மை நிலவரம் தெரியாமல் முட்டாள்தனமாக முதல்வர் விஜய் பேசுகிறார்; பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா? ராஜாஜியும், காமராஜரும் அமர்ந்திருந்த அந்த உயரிய முதல்வர் நாற்காலியில் இன்று ஒரு பொய்யர் வந்து அமர்ந்திருக்கிறார்” என்று ஆ.ராசா மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
