85 நாள் இழுபறி… இப்போ மாநாட்டிற்கே ஆப்பா?….. அமித் ஷா கூட்டத்திற்கு நோ சொன்ன ரங்கசாமி….. அரசியல் களத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி திருப்பம்….!

By Nanthini on ஆவணி 20, 2026

Spread the love

சென்னை அருகே உள்ள கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்க உள்ள நிலையில், அதில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது தென் பிராந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதல்வர்களும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஆனால், புதுச்சேரி ஆளும் கூட்டணியில் பாஜகவுக்கும் என்.ஆர். காங்கிரஸுக்கும் இடையே நிலவி வரும் தொடர் இழுபறிகள் காரணமாகவே முதல்வர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நீண்ட நாட்களாகியும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. சுமார் 85 நாட்களுக்கு மேலாக நீடித்த இந்த அதிகார இழுபறியால் நிர்வாக பணிகள், தொகுதி வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதன்பின்னர், துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகே இலாகாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

   

இருப்பினும், பேரவைத் தலைவர் (சபாநாயகர்) தேர்தலை நடத்துவது மற்றும் முக்கிய துறைகளை மீண்டும் பாஜகவுக்கு ஒதுக்குவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வந்து 100 நாட்களைக் கடந்த நிலையிலும் முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியையோ அல்லது மத்திய தலைவர்களையோ சந்திக்காமல் தவிர்த்து வந்தார். இந்த விரிசலின் தொடர்ச்சியாகவே தற்போதைய தென்மாநில முதல்வர்கள் மாநாட்டையும் அவர் புறக்கணித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் யூனியன் பிரதேசத்தின் முதல்வரே, மத்திய அமைச்சரின் தலைமையிலான முக்கிய மாநாட்டைப் புறக்கணிப்பது கூட்டணியின் பிளவை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. முதல்வர் இல்லாத நிலையில், புதுச்சேரி சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மட்டுமே இம்மாநாட்டில் கலந்துகொண்டு பிராந்திய கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளார். இந்த நகர்வு புதுச்சேரி ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் எதிர்கால அரசியல் சூழலில் மேலும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.