டாக்டருக்கே இந்த நிலைமையா..? 1 ஏக்கர் 98 சென்ட் நில பத்திரம்.. போலிசிடம் சிக்கிய சார்பதிவாளர்.. பின்னணியில் இருந்த ஏஜென்ட்…!

By Swetha on வைகாசி 23, 2026

Spread the love

சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஹாலிக் அலாவுதீன், ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பகுதியில் தனது தாயாரின் பெயரில் 1 ஏக்கர் 98 சென்ட் நிலத்தை வாங்குவதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்த நிலப் பத்திரத்தைப் பதிவு செய்ய, ராமநாதபுரம் வெளிப்பட்டினம் சார்பதிவாளர் ராமநாதன் என்பவர் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். நிலத்தை அவசரமாகப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த மருத்துவர், முதற்கட்டமாக சார்பதிவாளரின் வங்கி கணக்கிற்கு 3 லட்ச ரூபாயும், அவரது ஏஜென்ட் அயூப்கானிடம் ரொக்கமாக 17 லட்ச ரூபாயும் என மொத்தம் 20 லட்சம் ரூபாயை லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.

இருப்பினும், பேராசை பிடித்த சார்பதிவாளர் ராமநாதன், மீதமுள்ள தொகையை முழுமையாகக் கொடுத்தால் மட்டுமே நிலத்தைப் பதிவு செய்ய முடியும் என மருத்துவரைக் கட்டாயப்படுத்தியுள்ளார். இறுதிப் பேரமாக மீதித் தொகையில் 15 லட்சம் ரூபாயை உடனடியாகத் தருமாறும், அதில் 3 லட்சத்தை ரொக்கமாகவும், 12 லட்சத்தை வங்கி கணக்கிலும் செலுத்தும்படி நெருக்கடி கொடுத்துள்ளார். மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத மருத்துவர் ஹாலிக் அலாவுதீன், இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

   

லஞ்ச ஒழிப்புத் துறையினரின் திட்டப்படி, மருத்துவர் இரசாயனம் தடவிய 3 லட்சம் ரூபாய் பணத்தைச் சார்பதிவாளர் ராமநாதனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த அதிகாரிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். மேலும், இந்த லஞ்ச விவகாரத்தில் உடந்தையாக இருந்த ஏஜென்ட் அயூப்கானும் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சார்பதிவாளரின் வீடுகளில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டதோடு, அவர் ஏற்கனவே வாங்கிய 20 லட்சம் ரூபாயை மீட்கும் நடவடிக்கைகளிலும் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். அரசு அலுவலகத்தில் ஒரு மருத்துவருக்கே நேர்ந்த இந்த லஞ்சக் கொடுமை ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.