பாமகவில் ராமதாஸிற்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. கட்சியின் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தங்களுடைய பலத்தை கட்சியில் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக இருவரும் கூட்டத்தையும் நடத்தி வருகிறார்கள். மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டவர்கள் அதே பதவியில் தொடர்வார்கள் என்றும் அன்புமணி அறிவித்து அதிரடி காட்டுவதுமாக இருந்து வருகிறது. ஒருவரை ஒருவர் மாறி மாறி பயங்கரமாக குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜ் சாலையில் உள்ள எஸ்சிடி மஹாலில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ” அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது. தேவை என்றால் அன்புமணி எனது பெயரை இனிஷியல் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். என் பேச்சைக் கேட்காவிட்டால் என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. தசரதன் ஆணை ஏற்று இராமர் வனவாசம் சென்றார். ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக சிலர் கூறி வருகிறார்கள். ஐந்து வயது குழந்தையான நான்தான் மூன்று வருடங்களுக்கு முன்பு அன்பு அன்புமணியை பாமக தலைவர் ஆக்கியவன் என்று கூறியுள்ளார்.
