பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திமதி, வரும் டிசம்பர் 6, 2026 அன்று சென்னையில் புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கட்சியில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதலால் பாமக இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டது. அப்போது தனது அணியின் செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதியை ராமதாஸ் நியமித்தார். ஆனால், தேர்தல் ஆணையம் அன்புமணியை அதிகாரப்பூர்வத் தலைவராக அங்கீகரித்து மாம்பழம் சின்னத்தையும் ஒதுக்கியதால், ராமதாஸ் தரப்பு வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அன்புமணி தரப்பு 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ராமதாஸ் தரப்பு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியைத் தழுவியது. இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தந்தையும் மகனும் மீண்டும் இணைந்ததோடு, ராமதாஸ் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இதன் மூலம் பாமகவின் முழு அதிகாரமும் அன்புமணி ராமதாஸின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
தற்போது அன்புமணியின் தலைமையை ஏற்க விரும்பாமல் கட்சியிலிருந்து ஒதுங்கியுள்ள ராமதாஸின் தீவிர ஆதரவாளர்கள், ஸ்ரீகாந்திமதியின் புதிய இயக்கத்தில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகநீதி மற்றும் சமத்துவத்தை முன்வைத்துத் தொடங்கப்பட உள்ள இந்தப் புதிய இயக்கம், வன்னியர் வாக்குகளைக் குறிவைத்துக் களமிறங்கினால் அது பாமகவிற்குப் பெரும் சவாலாகவும் போட்டியாகவும் அமையுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
