நடிகர் கார்த்தி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு இளம் நடிகர். ரசிகர்களுக்கு சாதாரணமாக காதல், நடனம், காமெடி படங்கள் என கொடுக்காமல் தனது கதை தேர்வில் வித்தியாசம் காட்டி மக்களுக்கும் ஒருபுதுவித அனுபவத்தை கொடுத்து வருகிறார். பருத்திவீரனில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், தீரன், கைதி என சூப்பர் டூப்பர் ஹிட படங்களை கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவரின் 25 ஆவது படமாக ‘ஜப்பான்’ படம் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பவா செல்லதுரை மற்றும் அனு இம்மானுவேல் ஆகியோர் நடித்திருந்தனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகி அட்டர் ப்ளாப் ஆனது. அது மட்டுமில்லாமல் கடுமையான கேலிகளை சந்தித்தது. கார்த்தியின் நடிப்பு மற்றும் உடல்மொழி ஆகியவை ரசிகர்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி பேசியுள்ள இயக்குனர் ராஜு முருகன் “கார்த்தி சார் என்னுடன் இணைந்து படம் பண்ணவேண்டும் என ஆசைப்பட்டார். அவருக்காக நான் ஒரு கதை சொன்னேன். ஆனால் அந்த கதை அவரை பெரிதாகக் கவரவில்லை. அப்போது நான் ஜப்பான் என்று வேறு ஒரு கதை எழுதியிருந்தேன். அது தயாரிப்பாளர் பிரகாஷ் சார் மூலமாக கார்த்தி சாருக்கு சென்றுள்ளது.
ஜப்பான் படம் கார்த்தி சாருக்காக எழுதப்பட்டதல்ல. ஆனால் அந்த கதாபாத்திரம் அவருக்குப் பிடித்ததால் நடிக்க ஆசைப்பட்டார். அதனால் நான் அவருக்காக நிறைய மாற்றங்கள் செய்தேன். அதனால் படம் அதுவாக ஒன்றாக உருவாகியது. அதன் தோல்விக்கு முழுக் காரணமும் நான். அது ஒரு வழக்கமான கமர்ஷியல் படமாக மாறிவிட்டது. இப்போது கூட அதில் குறிப்பிட்டு கட்டுடைப்பு செய்ய சில விஷயங்கள் உள்ளன.” எனப் பேசியுள்ளார்.
