ரஜினிக்கு திருப்புமுனையாக அமைந்த படம்… ரிலீஸ் சிக்கலுக்கு பெரும் உதவி செய்த கமல்- பலரும் அறியாத தகவல்!

By vinoth

Published on:

rajini and mahendran

தமிழ் சினிமாவுக்கு எம் ஜி ஆரால் அழைத்து வரப்பட்டவர் மகேந்திரன். தங்கள் கல்லூரி விழாவில் எம் ஜி ஆர் முன்பு தமிழ் சினிமாவைக் காட்டமாக விமர்சித்து அவரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் சென்னை வந்து துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றிய போது அவரை அடையாளம் கண்டுகொண்டு அவரை சினிமாவுக்கு அழைத்து வந்து கதை வசனம் எழுத வைத்தார்.

தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதிய மகேந்திரன் முதல் முதலாக முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். உமா சந்திரனனின் முள்ளும் மலரும் நாவலை திரைக்கதையாக்கி தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் கொடுத்துள்ளார். திரைக்கதை அவருக்குப் பிடிக்கவே படத்தைத் தொடங்கலாம் எனக் கூறியுள்ளார்.

   

ஆனால் படத்தின் முக்கியக் கதாபாத்திரமான அந்த காளி கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கப் போகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு மகேந்திரனோ ரஜினிகாந்த் என பதிலளித்துள்ளார். அதைக் கேட்டு ஷாக் ஆன வேணு செட்டியார் “உங்களுக்கு என்ன பைத்தியமா? வில்லனாக நடித்து வரும் அவரை எப்படி அந்த கதாபாத்திரத்தில் ரசிகர்கள் ரசிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் அவர் கருப்பாக வேறு இருக்கிறார்” எனக் கூறியுள்ளார். அதன் பிறகு அவர் ஒருவழியாக சம்மதிக்க படப்பிடிப்பு நடந்துள்ளது.

தான் கதை வசனம் எழுதிய படங்களில் தேவைக்கதிகமாக வசனத்தை பயன்படுத்தியதாக ஒரு குற்றவுணர்ச்சி மகேந்திரனுக்கு இருந்துள்ளது. அதனால் அவர் தான் இயக்கிய படத்தில் விஷ்வல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படமாக்கியுள்ளார். எடுத்த வரையிலான காட்சிகளைப் பார்த்த தயாரிப்பாளர்  படம் தேறாது என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதனால் மீதிக் காட்சிகளை படமாக்க பணம் தர முடியாது எனக் கூறியுள்ளார்.

அப்போது மனதளவில் உடைந்து போன மகேந்திரன் நடந்ததை எல்லாம் தன்னுடைய நெருங்கிய நண்பரான கமல்ஹாசனிடம் சொல்லி புலம்பியுள்ளார். மகேந்திரனின் திறமை மேல் அபார நம்பிக்கைக் கொண்டிருந்த கமல்ஹாசன் “மீதமுள்ள காட்சிகளைப் படமாக்க நான் பணம் தருகிறேன்” என சொல்லி ஷூட்டிங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதன்பிறகுதான் செந்தாழம்பூவில் பாடலையும் சில காட்சிகளையும் படமாக்கி முடித்துள்ளார் மகேந்திரன். இதைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு மேடையில் கூறி கமலுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் மகேந்திரன்.