“எங்க மேல இருக்குற பக்தியால தான் நிக்கிறாங்க”…. திமுகவை இறங்கி அடித்த தவெக அமைச்சர் ராஜ்மோகன்….!

By Nanthini on புரட்டாதி 7, 2026

Spread the love

சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்குப் பிறகு பெரும் அரசியல் விவாதம் உருவானது. முதலமைச்சரின் உரையைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்களுக்குப் பேச வாய்ப்பளிக்க மறுக்கப்பட்டதால், அவர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டுத் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது எழ முடியாமல் தடுமாறிய திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரனுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று கைகொடுத்துத் தூக்கிவிட்ட நிகழ்வு, அவையில் பெரும் கவனத்தைப் பெற்றது.

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், எதிர்க்கட்சியினரை நகைச்சுவையாகவும் அதேவேளையில் கடுமையாகவும் விமர்சித்தார். “முதல்வர் பேசும்போது நாங்கள் கூட அமர்ந்துதான் கேட்டோம்; ஆனால் எதிர்க்கட்சியினர் அவர் மீது கொண்ட பக்தியின் காரணமாக நின்றுகொண்டே மரியாதையாகக் கேட்டனர்” என்று குறிப்பிட்ட அவர், அவை மாண்பை மீறித் தரையில் அமர்ந்த திமுகவினரை முதலமைச்சர் கைகொடுத்துத் தூக்கிவிட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டி, “தரையில் அமர்ந்த திமுக.. தூக்கிவிட்ட தவெக” எனச் சுவாரசியமாக விவரித்தார்.

   

முன்னதாக, தவெகவைச் சேர்ந்த ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ ஆனந்த் மோகன், எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விவகாரம் மற்றும் முதல்வரின் ஆலோசகர் விஷ்ணு குறித்து எதிர்க்கட்சியினர் ஆதாரமின்றிப் பொய்களைப் பரப்பி வருவதாகவும், அவர்களுக்குச் சில ஊடகங்கள் ஊதுகுழலாகச் செயல்பட்டுச் செய்திகளைத் திரித்து வெளியிடுவதாகவும் சாடினார்.

   

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், 50 பேர் கொண்ட எதிர்க்கட்சியினருக்கு இடையே ஒற்றை ஆளாக நின்று முதலமைச்சர் ஆற்றிய உரை உண்மையின் பலத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காகத் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் வதந்திகளையும் திட்டமிட்டுப் பரப்பினால், செய்தி நிறுவனங்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.