தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், புதிய திராவிட கழகத்தின் தலைவர் எஸ். ராஜ்குமார் (முன்னர் கே.எஸ். ராஜ் கவுண்டர்), எதிர்வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கவும், அக்கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களின் வெற்றிக்கும் புதிய திராவிட கழக நிர்வாகிகள் அயராது பாடுபடுவார்கள் என்று உறுதி அளித்தார்.
இந்த அறிவிப்பின் முக்கிய அம்சமாக, இதுவரை ‘ராஜ் கவுண்டர்’ என்று அழைக்கப்பட்டு வந்த அவர், இனி ‘எஸ். ராஜ்குமார்’ என்றே அழைக்கப்படுவார் என்று அறிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டபோது, ராஜ் கவுண்டர் என்ற பெயரைப் பயன்படுத்தியது விமர்சனங்களை எழுப்பியது. சமூக நீதி பேசும் திமுக கூட்டணியில் சாதிப்பெயரை அடையாளமாகக் கொண்டிருப்பது குறித்து எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் அவர் தனது பெயரில் உள்ள சாதி அடையாளத்தைத் தவிர்த்துவிட்டு ராஜ்குமார் என மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், வரவிருக்கும் தேர்தலில் திமுகவிடம் மூன்று தொகுதிகளை ஒதுக்கக் கோரிக்கை வைக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன், வேட்டுவக் கவுண்டர் சமூகத்தின் பல்வேறு உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து, அவர்களை ‘வேட்டுவக் கவுண்டர்’ என்ற ஒரே பெயரின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் தமிழக அரசிடம் முன்வைத்துள்ளார். பிப்ரவரி இரண்டாம் வாரத்திலிருந்து திமுக கூட்டணிக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாகத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தப் போவதாகவும் ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
