இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியலின் வழிகாட்டியுமான ஐயா ஆர். நல்லகண்ணு அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (பிப்ரவரி 25, 2026) மதியம் 1.55 மணியளவில் காலமானார். கடந்த 24 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மறைவு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது உடல்நிலை குறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது மூப்பு மற்றும் இதர உடல்நலப் பாதிப்புகள் காரணமாக அவரது உடல்நிலையில் அவ்வப்போது ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்தன. பல்துறை மருத்துவக் குழுவினர் அவருக்குத் தொடர்ந்து அதிதீவிர கண்காணிப்புடன் கூடிய சிகிச்சைகளை வழங்கி வந்தனர்.
இன்று அதிகாலை முதல் அவரது உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியது. மருத்துவர்கள் வழங்கிய மருந்துகளை ஏற்கும் தன்மையை அவரது உடல் படிப்படியாக இழந்தது. அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் அடுத்தடுத்து செயலிழந்ததால், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது மறைவுக்கு மருத்துவமனை நிர்வாகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த நல்லகண்ணு அவர்களின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காகக் கட்சி அலுவலகத்தில் வைக்கப்படவுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகப் போராடிய அவர், மறைவிற்குப் பிறகும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில், தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்குத் தானமாக வழங்க ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி, நாளை அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
