தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் பல்வேறு கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் முதல் சீமான், அன்புமணி ராமதாஸ் வரை பலரையும் சந்தித்து வரும் விஜய், தமிழ் திரையுலகின் மூத்த நட்சத்திரமான ரஜினிகாந்தையும் சந்திக்க முயற்சி மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தச் சந்திப்பு நிகழாமல் போனது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ரஜினிகாந்திடம் நேரில் வாழ்த்துப் பெற விஜய் தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், தான் பெங்களூரு செல்வதாகக் கூறி ரஜினி அந்தச் சந்திப்பைத் தவிர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வெற்றியைத் திரையுலகைச் சேர்ந்த பலரும் பாராட்டி வரும் நிலையில், ரஜினிகாந்த் இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பெரிய அளவில் வாழ்த்து எதையும் தெரிவிக்கவில்லை. கமல்ஹாசன் போன்ற சமகாலப் போட்டியாளர்களே வாழ்த்து கூறிய நிலையில், ரஜினியின் இந்த மௌனம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு இடமளித்துள்ளது.
முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியான அன்று தமிழக வெற்றிக் கழகத்திற்கு ரஜினி சமூக வலைதளத்தில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அந்தப் பதிவிற்கு விஜய் கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து இன்றுதான் நன்றி தெரிவித்துள்ளார். “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி” என விஜய் பதிவிட்டிருந்தாலும், இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் ஒரு வார்த்தைப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில் ரஜினி நேரில் சந்திப்பதைத் தவிர்த்தது தீயாய் பரவி வருகிறது.
இன்று காலை பெங்களூரு புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்திடம், விஜய் முதல்வரானது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு ரஜினி வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்துவிட்டு, கருத்து ஏதும் கூறாமல் கடந்து சென்றார். அண்ணா காலத்து அரசியல் நாகரிகம் மீண்டும் துளிர்விடுவதாகப் பாராட்டுகள் எழுந்தாலும், ரஜினி-விஜய் இடையிலான இந்தத் தூரம், திரைத்துறையைத் தாண்டி அரசியலிலும் ஒரு பனிப்போரைச் சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
