பாட்ஷா பாத்து காப்பி அடிச்சு பல படம் வந்துருக்கு… ஆனா பாட்ஷா படமே இந்த படத்தோடு காப்பிதான் தெரியுமா?

By vinoth

Published on:

கமர்ஷியல் சினிமாவின் உச்சமாக அமைந்தது ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம். 90 களில் ரஜினியின் மார்க்கெட் புதிய உச்சத்தைத் தொட்டது. அதில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது பாட்ஷா திரைப்படம். அந்த படத்தின் வெற்றியால் அதே திரைக்கதை பார்மட்டில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெவ்வேறு நடிகர்களை வைத்து உருவாகின.

இந்த படம் பற்றி ஒரு சுவாரஸ்யத் தகவலை பகிர்ந்துள்ளார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. அதில் “பாட்ஷாவுக்கு முன்பு வரை ரஜினி சாருக்கு தெலுங்கில் மார்க்கெட்டே இல்லை. அவர் படங்கள் தெலுங்கில் ஓடவே ஓடாது. அதனால் பாட்ஷா படத்தை குறைவான விலைக்குதான் விற்றார்கள். ஆனால் படம் சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகுதான் ரஜினி சாருக்கு நிலையான தெலுங்கு மார்க்கெட் உருவானது. எல்லா படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டன” எனக் கூறியிருந்தார்.

   

பாட்ஷா படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பலரும் அதன் திரைக்கதையமைப்பை லேசாக மாற்றி காப்பி அடித்து படங்களை உருவாக்கினர். தமிழிலே ஜனா மற்றும் கஜேந்திரா போன்ற படங்கள் பாட்ஷாவை தழுவி உருவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்படிப்பட்ட பாட்ஷாவே ஒரு இந்தி படத்தின் காப்பிதான் என்பது பலரும் அறியாத தகவல். அமிதாப்பச்சன் நடித்த ஹம் என்ற இந்தி படத்தின் தழுவல் தான் பாட்ஷா. தனது நிழல் உலக வாழ்க்கையை மறைத்துக் கொண்டு அமிதாப் பச்சன் தனது தம்பி தங்கைகளோடு வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அவரின் உண்மை முகம் குடும்பத்துக்கு தெரிய வர, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

ஆனால் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஹம் படத்தின் திரைக்கதையை தலைகீழாக மாற்றி முதல் பாதியை இரண்டாம் பாதியாகவும் இரண்டாம் பாதியை முதல் பாதியாகவும் தனது திறமையான திரைக்கதை மூலம் மாற்றினார். அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.