விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வென்று இமாலய வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மே 5-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பது உறுதி எனக் குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பாகுபாடின்றி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
திமுகவின் மகளிர் உரிமைத் தொகை ஒரு ஏமாற்று நாடகம் என்று விமர்சித்த அவர், பிரிந்த குடும்பங்களை இணைக்க ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம் வழங்கப்படும் என்ற அதிரடி வாக்குறுதியை முன்வைத்தார். மத்தியில் மோடி ஆட்சியும், மாநிலத்தில் எடப்பாடி ஆட்சியும் அமைவதே தமிழகத்தின் பொற்காலம் என்று கூறினார்.
வரும் 23-ஆம் தேதி சென்னையில் பிரதமர் மோடி முன்னிலையில் அதிமுக – பாஜக தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி மெகா கூட்டணியை உறுதிப்படுத்துவார்கள் என்றும், தொகுதிப் பங்கீடுகள் சுமூகமாக முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய அவர், அதிமுக தொண்டர்கள் துப்பாக்கித் தோட்டாக்களாக ஒன்றிணைந்து செயல்பட்டு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது நிச்சயம் என்று கூறியுள்ளார்.
