ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் உள்ள கோரக்இம்லி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், குவைத்தில் இருக்கும் தனது கணவர் வாட்ஸ்அப் மூலம் தனக்கு ‘முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்ததாக மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். நம் நாட்டில் முத்தலாக் நடைமுறை சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் கணவர் மீது அதிரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான ஆசிக் இக்பால் என்பவர், தனது மனைவி மற்றும் 16, 10 வயதுடைய இரு மகன்களையும் பிரிந்து குவைத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்தியா வரும்போதெல்லாம் தனது கணவர் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாகத் துன்புறுத்தியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். சிறிய அளவிலான குடும்பப் பிரச்சினைகளுக்குக் கூட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை அடித்து உதைத்து சித்திரவதை செய்ததால், அவர் தனது இரு மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், கடந்த மே 17 அன்று குவைத்தில் இருந்து ஆசிக் இக்பால் தனது மனைவிக்கு வாட்ஸ்அப் வழியாக ‘முத்தலாக்’ கூறி விவாகரத்து செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஊர்மிளா கூறுகையில், பெண்ணின் புகாரின் அடிப்படையில் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குவைத்தில் இருக்கும் அவருக்குச் சம்மன் அனுப்பி நேரில் விசாரணைக்கு அழைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ‘முத்தலாக்’ முறை என்பது முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. மேலும், மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு இதற்கெனத் தனிச் சட்டம் கொண்டு வந்து, முத்தலாக் கூறுவதைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்துள்ளது. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி, மனைவியைக் கொடுமைப்படுத்திய கணவர் மீது தற்போது சட்டம் தன் கடமையைச் செய்யப் பாய்ந்துள்ளது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
