“மும்பை யாருடையது?” தமிழ்நாட்டு “ரசமலாய்” எங்களுக்கு பாடம் எடுப்பதா..? அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே – மகாராஷ்டிர அரசியலில் வெடித்த சர்ச்சை..!!

By Soundarya on தை 12, 2026

Spread the love

மும்பை மாநகராட்சித் தேர்தலுக்கான (BMC) பிரசாரத்தின் போது பாஜகவின் அண்ணாமலை தெரிவித்த கருத்துகள் மகாராஷ்டிர அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து வந்த ‘ரசமலாய்’ எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என ராஜ் தாக்கரே கேலி செய்துள்ளார். மும்பை விவகாரங்களில் தலையிட அண்ணாமலைக்கு என்ன உரிமை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய அவர், மராத்திய மக்களின் அடையாளத்தைச் சிதைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

முன்னதாக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “மும்பை மகாராஷ்டிராவின் நகரம் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச நகரம்” எனக் குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்தது. மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் சென்னை மற்றும் பெங்களூருவை விடப் பல மடங்கு அதிகம் என்பதால், அதனை நிர்வகிக்கத் திறமையானவர்கள் தேவை எனவும், பாஜக மேயர் அங்கு அமைய வேண்டும் எனவும் அவர் பேசினார். அண்ணாமலையின் இந்த பேச்சு மராத்திய தியாகிகளை அவமதிப்பதாகக் கூறி, அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சிவசேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார். பாஜக மும்பையை மகாராஷ்டிராவிலிருந்து பிரிக்கச் சதி செய்வதையே அண்ணாமலையின் பேச்சு வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன