மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழைக்கு மத்தியில், காஞ்சூர்மார்க் பகுதிக்கு அருகே வெள்ளத்தில் மூழ்கிய இரயில் தண்டவாளத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் சீறிப்பாயும் ஒரு வியத்தகு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த செமி-ஹை-ஸ்பீடு இரயில், தண்டவாளத்தில் தேங்கியிருந்த மழைநீரைக் கிழித்துக் கொண்டு சீராகச் செல்லும்போது, அதன் இருபுறமும் தண்ணீர் பெரிய அளவில் விசிறியடிப்பது போன்ற காட்சிகள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
மும்பை நகரில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் பல தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கடினமான சூழ்நிலையிலும், இரயில்வே நிர்வாகம் தண்டவாளங்களின் நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து ரயில்களைத் தொடர்ந்து இயக்கி வருகிறது.
https://www.instagram.com/reel/DaYgHWASBqQ/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வைரல் வீடியோ இணையவாசிகளிடையே கலவையான கருத்துக்களைப் பெற்றுள்ளது. சிலர் வந்தே பாரத் இரயிலின் சிறந்த பொறியியல் வடிவமைப்பு மற்றும் கடினமான சூழலிலும் அதன் செயல்பாட்டுத் திறனைப் பாராட்டியுள்ளனர். அதே நேரத்தில், மும்பையின் வடிகால் அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளையே இந்த வெள்ளக்காட்சி பிரதிபலிக்கிறது எனப் பலரும் தங்களது கவலைகளையும் விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
