சென்னையில் சிறுமி ஒருவருக்கு எதிரான பாலியல் வழக்கில் தொழிலதிபர் வீரமணி சிக்கியுள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சமூக ஆர்வலர் ஒருவரிடம் மர்ம நபர் கொடுத்த பென்டிரைவ் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய வீடியோ ஆதாரத்தை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்து வைத்த குற்றத்திற்காக கணேசன் என்பவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட கணேசனிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். வீரமணி மற்றும் அவரது தொடர்புடைய நபர்களான பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமாக பெரம்பூர், ராயப்பேட்டை, கோபாலபுரம், தியாகராய நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் விடிய விடிய இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் முடிவில் வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் பல முக்கிய ஆவணங்கள், செல்போன்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சோதனையில் கைப்பற்றப்பட்ட மின்னணுப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து வரும் போலீசார், அடுத்தக்கட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த வீடியோவை பயன்படுத்தி வீரமணியிடம் பல கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்ற நபர்கள் குறித்தும் ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மிரட்டல் விவகாரத்தில் சில அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், காவல்துறை அந்த கோணத்திலும் தங்களது விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.
