தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் என பலவகையான கதாபாத்திரங்களில் நடித்துக் கலக்கியவர் ரகுவரன். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் முதலாக சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தமிழில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகிய ரகுவரன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஏழாவது மனிதன் திரைப்படம் 80 களில் அதிகமாக வந்த இடதுசாரி கருத்துள்ள திரைப்படங்களில் ஒன்றாகும்.
இந்த படத்தின் மூலம் ஹீரோவாக ரகுவரனுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. ஆனால் அந்த படம் கமர்ஷியலாக வெற்றி பெறாததால் ரகுவரனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால்தான் அவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நடித்த சிவா, சம்சாரம் அது மின்சாரம், புரியாத புதிர், அஞ்சலி ஆகிய திரைப்படங்கள் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத்தந்தன. ரஜினியோடு அவர் நடித்த பாட்ஷா திரைப்படம் அவரைப் புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றது என்று சொல்லலாம்.
இடையில் அவர் மணிரத்னம் இயக்கத்தில் ‘அஞ்சலி’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படமும் நல்ல ஹிட்டாக அமைந்தது. ஆனாலும் ரகுவரன் தொடர்ந்து ஹீரோவாக நடிக்காமல் வில்லன் நடிகராகவே நடித்தார். இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னர் அவரே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “அஞ்சலி படத்துக்குப் பிறகு நான் நினைத்திருந்தால் தொடர்ந்து ஹீரோவாக நடித்திருக்கலாம். ஆனால் அது போன்ற் ஆழமான கதாபாத்திரங்கள் வரவில்லை. வழக்கமாக ஆடி பாடும், சண்டை போடும் ஹீரோ வேடத்தில் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.