மக்களை ‘தெருநாய்களுடன்’ ஒப்பிட்டாரா ராகவா லாரன்ஸ்…? இணையத்தில் வெடித்த புது சர்ச்சை…!!

By Swetha on ஆனி 14, 2026

Spread the love

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசும்போது, “தெருநாய்களுக்குக் கூட அவற்றிற்குப் பிடித்த உணவைக் கொடுக்க வேண்டும். அதேபோன்று மக்களுக்குத் தேவையானதை அறிந்து செய்வதற்கு அரசுக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவை” என்று குறிப்பிட்டார். மக்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளைத் தெருநாய்களுடன் ஒப்பிட்டு அவர் பேசிய இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் புதிய விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், பள்ளிக்கல்வித் துறை மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்களின் செயல்பாடுகள் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். முதலமைச்சருக்கு ஆதரவாகப் பேசுவதால் தன் மீது விமர்சனங்கள் வரலாம் என்றும், களத்திற்கு ஏற்றவாறு விளையாடத் தான் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், மாற்றம் வேண்டும் என்று கேட்கும் மக்கள், அதற்கான நேரத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன், எதிர்க்கட்சிகள் அரசைப் பொறாமை காரணமாகவே கடுமையாக விமர்சித்து வருவதாகவும், நாம் என்ன செய்தோம் என்று யோசித்துவிட்டு விமர்சிக்க வேண்டும் என்றும் லாரன்ஸ் குறிப்பிட்டார்.

   

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய் தொடங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ இணைந்து செயல்படுவேனா என்பது தற்போதைக்கு சஸ்பென்ஸ் என்றும், இது தொடர்பாக சில போன் கால்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இறுதியாக, தான் செய்யும் அனைத்து விஷயங்களையும் நடிகர் ரஜினிகாந்தின் ஆசியோடுதான் செய்து வருவதாகக் கூறி ராகவா லாரன்ஸ் தனது பேட்டியை நிறைவு செய்தார்.