ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ராகவ் சத்தா, அக்கட்சியிலிருந்து விலகி திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் சில ஆம் ஆத்மி எம்.பி.க்களும் பாஜகவில் இணைந்துள்ளதால், டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காதது மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது மௌனம் காத்தது போன்ற காரணங்களால் அவர் மீது ஆம் ஆத்மி தலைமை அதிருப்தியில் இருந்தது. இதன் தொடர்ச்சியாக அவர் வகித்து வந்த மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இந்தக் கட்சித் தாவல் முடிவுக்குப் பிறகு, ராகவ் சத்தாவிற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் பாஜகவில் இணைந்த சில மணி நேரங்களிலேயே, அவரது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் ஃபாலோயர்களின் (Followers) எண்ணிக்கை மளமளவென குறையத் தொடங்கியுள்ளது. அவரைப் பின்தொடர்ந்த பல இளைஞர்கள், ‘துரோகி’ என்றும் ‘விபீஷணன்’ என்றும் விமர்சித்து அவரை அன்ஃபாலோ (Unfollow) செய்து வருகின்றனர். கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்த்து வந்த ராகவ் சத்தா, தற்போது அதே கட்சியில் இணைந்ததை அவரது தீவிர ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே இதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
