பணி ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ள நடவடிக்கை, கடும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. மின்வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக (சி.எம்.டி) இருந்த இவர், அண்மையில் சாதாரண பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ள இவரை, மீண்டும் அதிகாரம் மிக்க உயர் பதவியில் நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ஆம் தேதி அவர் முறைப்படி இப்பதவியை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு மீண்டும் மீண்டும் செல்வாக்குமிக்க பதவிகளை வழங்குவது தொடர்பாக, அரசு ஊழியர்கள் மத்தியிலும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் அமைப்புகளிடமும் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. ஏற்கனவே பணி ஓய்வு பெற்ற பனீந்தர் ரெட்டி ஐ.ஏ.எஸ். மற்றும் ரீட்டா ஹரீஸ் தாக்கர் ஐ.ஏ.எஸ். ஆகியோருக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்ட போதே கடும் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே பாணியில் ராதாகிருஷ்ணனுக்கும் முக்கிய நியமனம் வழங்கப்பட்டிருப்பது, மூத்த அதிகாரிகளுக்குச் சாதகமாக அரசு செயல்படுகிறதோ என்ற கேள்வியை மீண்டும் வலுக்கச் செய்துள்ளது.
இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு வலுப்பதன் பின்னணியில், மின்சார வாரியத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடு புகார்கள் முன்னிற்கின்றன. ராதாகிருஷ்ணன் மின்வாரிய தலைவராக இருந்த காலத்தில் ரூ.397 கோடி மதிப்பிலான மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கொள்முதல் முறைகேடுகள் மற்றும் ஹார்ட் டிஸ்க் காணாமல் போன சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த மின்மாற்றி கொள்முதல் தொடர்பான டெண்டர் பரிசீலனைக் குழுவில் ராதாகிருஷ்ணனும் இடம்பெற்றிருந்ததால், இது தொடர்பாகத் தற்போது சி.பி.ஐ. விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மின்சாரக் கட்டணம் நிர்ணயம் மற்றும் கொள்முதல் முடிவுகளைத் தீர்மானிக்கும் உயரிய ஒழுங்குமுறை ஆணையத்திலேயே, இவ்வழக்கில் தொடர்புடைய ஒருவரை அமர்த்துவது நியாயமான விசாரணையைப் பாதிக்கும் என ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நியமனத்தின் மூலம் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஊழல் எதிர்ப்பு அமைப்புகளுடன் இணைந்து ராதாகிருஷ்ணனின் புதிய நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஓய்வு பெற்ற ஊழியர்கள் தயாராகி வருவதால், இ விவகாரம் விரைவில் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
