தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். தற்போது விடுதலை -2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்போது அவர் நான்கு ஆண்டுகளாக உருவாக்கி வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரிலீஸாகி பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முதல் பாகத்தில் சிறிது நேரமே வந்த விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் முழுவதுமாக வந்துள்ளது. சொல்லப்போனால் இரண்டாம் பாகம் முழுவதுமே பெருமாள் வாத்தியார் மற்றும் அவரைச் சுற்றிய கதாபாத்திரங்களின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் விஜய் சேதுபதியின் நடிப்பைப் பார்த்து மிரண்டு பாராட்டி வருகின்றன்ர். இந்நிலையில் விஜய் சேதுபதியின் நிஜ வாழ்க்கையில் தமிழ் தேசிய போராளியாக அறியப்பட்ட புலவர் கலியபெருமாள் என்பவரைத் தழுவிதான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது பலரும் அறியாதது.
தற்போதைய கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் பிறந்த கலியபெருமாள் சுயமரியாதை இயக்கம் மூலம் அரசியலில் ஆர்வமாகி பின்னர் தமிழக பொதுவுடமைக் கட்சி என்ற அமைப்பில் சேர்ந்து ஆயுதமேந்திய போராளியாக மாறினார். இதனால் 1971 ஆம் ஆண்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் அவரது மனைவியின் முயற்சியால் ஜனாதிபதிக்குக் கருணை மனு போட்டு ஆயுள்தண்டனையாக மாறியது. ஆயுள்தண்டனையை அனுபவித்து விடுதலை ஆன அவர் அதன் பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. 2007 ஆம் ஆண்டு அவர் தன்னுடைய 83 ஆம் வயதில் காலமானார்.
