குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இங்கெல்லாம் குடிக்கவே முடியாது… போலீசாரின் சினிமா பாணி வேட்டை….!

By Nanthini on ஆனி 2, 2026

Spread the love

புதுச்சேரி என்றாலே சுற்றுலாப் பயணிகளுக்கும் மது பிரியர்களுக்கும் நினைவுக்கு வரும் ஒரு இடமாக இருந்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக பொது இடங்களில் மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க காவல்துறை அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஐஜி ஷாலினி சிங் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, புதுச்சேரி முழுவதும் பொது இடங்களில் மது அருந்துபவர்களைக் கண்காணித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பணிகளைப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

   

வார இறுதி நாளான நேற்று புதுச்சேரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில், ஒதியன்சாலை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட சுப்பையா சாலை, அண்ணாசாலை, புஸ்சி வீதி, ஆம்பூர்சாலை, கடற்கரை பகுதிகள் மற்றும் பழைய துறைமுக மைதானம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆங்காங்கே பொது இடங்களில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தவர்களைப் போலீசார் எச்சரித்து விரட்டியடித்தனர்.

   

அப்பொழுது போலீசாரைக் கண்டதும் சில மது பிரியர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாகப் போலீசார் அவர்களை சினிமா பாணியில் விடாமல் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். இவ்வாறு பிடிபட்டவர்களைக் கைது செய்த போலீசார், பொது இடங்களில் மது அருந்திய குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஒதியன்சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 7 பேர் மீது வழக்கு பாய்ந்தது. இதேபோல் புதுச்சேரி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட பார்கள் அல்லது உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, ராக் பீச், பாண்டிச்சேரி மெரினா, பேரடைஸ் பீச் போன்ற கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், சாலைகள் மற்றும் பொது வழிகளில் வாகனங்களை நிறுத்தி அதற்குள் அமர்ந்து மது அருந்துவது கடுமையான குற்றமாகும். இந்த விதியை மீறுபவர்களுக்கு ₹5,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை (அல்லது இரண்டும்) விதிக்கப்படலாம். புதுச்சேரிக்கு வரும் பெரும்பாலான இளைஞர்கள் மது அருந்துவதையே பிரதான நோக்கமாகக் கொண்டு வரும் சூழலில், காவல்துறையினரின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கை மது பிரியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.