“யாரோ எழுதி கொடுத்ததை வாசித்து”…. நிதியமைச்சரை மேடையிலேயே வச்சு செய்த பி.டி.ஆர்…. கதறும் அரசியல் களம்…!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் உரை குறித்து முன்னாள் நிதியமைச்சரும், திமுக தலைவர்களில் ஒருவருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பிறகு அரசியலிலிருந்து சில மாதங்கள் ஓய்வு எடுப்பதாக அறிவித்திருந்த அவர், கலைஞர் நினைவு நாளன்று மதுரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்பியுள்ளார். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மாநிலத்தின் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை மற்றும் தற்போதைய நிதியமைச்சரின் செயல்பாடுகள் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “என்னுடைய கணிப்பில் இந்த பட்ஜெட்டை தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் சொந்தமாக எழுதியிருக்க முடியாது. அதிகாரிகளால் தயார் செய்து கொடுக்கப்பட்ட உரையை அப்படியே வாசித்ததாலேயே, அதைச் சபையில் வாசிப்பதற்கு அவர் மிகுந்த சிரமப்பட்டார்” என்று விமர்சித்தார். மேலும், தான் நிதியமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் பட்ஜெட் உரையை முதன்மையாக ஆங்கிலத்தில் தாங்களே எழுதி, பின்னர் தமிழாக்கம் செய்து, இருமுறை சரிபார்த்த பின்னரே பேரவையில் வாசித்ததாகத் தெரிவித்தார். புள்ளிவிவரங்கள் அனைத்தும் மனதில் பதிந்திருக்கும் என்பதால், காகிதங்களைப் பார்க்காமல் இயல்பாக மக்களிடம் உரையாடுவது போல் பேசுவதே முறையான அணுகுமுறை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

   

தொடர்ந்து பேசிய அவர், சுமார் இரண்டு மணி நேரம் அச்சிடப்பட்ட தாள்களை மட்டுமே பார்த்துப் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார். “இன்றைய டிஜிட்டல் சூழலில் பட்ஜெட் விவரங்களை இணையத்திலேயே எளிதாகப் பதிவேற்றம் செய்துவிட முடியும். எனவே, பல மணி நேரம் பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்கும் மரபை மாற்றியமைப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். அரசு அதிகாரிகள் பழைய நடைமுறைகளையே மீண்டும் மீண்டும் பின்பற்றி வருகின்றனரே தவிர, புதிய கோணத்தில் சிந்திக்க மறுக்கிறார்கள்,” என்று அரசு இயந்திரத்தின் மீதான தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.

   

சட்டமன்ற விதிகளில் சில நல்ல அம்சங்கள் இருந்தாலும், காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களத்திற்கு வந்துள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் இந்த விமர்சனங்கள், தற்போதைய நிதி நிர்வாகம் மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்யும் மரபு சார்ந்த விவாதங்களை தமிழக அரசியல் களத்தில் மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளன.