“திடீர் விசிட்… அடுக்கடுக்கான புகார்கள்…! 24 மணி நேரத்தில்… மொத்தமாக மாறிய சைதாப்பேட்டை விடுதி… மாஸ் காட்டிய முதலமைச்சர் விஜய்…!!”

By Swetha on ஆடி 18, 2026

Spread the love

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், சென்னை சைதாப்பேட்டையில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதிக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த திமுக ஆட்சியில் 10 தளங்களுடன், ரூ. 44.5 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு, 2024 ஏப்ரல் 14 அன்று அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட இந்த விடுதியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த ஆய்வின்போது கழிவறைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்ட முதலமைச்சருடன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வின்போது, விடுதி மாணவர்கள் தங்களுக்கு நடக்கும் அநீதிகள் மற்றும் குறைகளை முதலமைச்சரிடம் அடுக்கடுக்காக முன்வைத்தனர். குடிநீர் தட்டுப்பாடு, தரமற்ற உணவு, ஊழியர்களின் மரியாதையற்ற பேச்சு, பணியாளர்கள் பற்றாக்குறை, விளையாட்டு மைதானம் பூட்டப்பட்டுக் கிடப்பது மற்றும் பகுதி நேர வேலைக்குச் செல்லும் மாணவர்கள் இரவில் வெளியில் கொசுக்கடியில் தூங்கும் அவலம் எனப் பல புகார்களைப் பட்டியலிட்டனர். மாணவர்கள் கூறிய அனைத்துக் குறைகளையும் கைகளைக் கட்டிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக்குறிப்பெடுத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய், அவற்றுக்கு விரைந்து தீர்வு காண்பதாக உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் வன்னி அரசு மற்றும் சம்பத் குமார் ஆகிய இருவரும் விடுதியின் இரவு உணவை நேரடியாக உண்டு அதன் தரத்தை ஆய்வு செய்தனர்.

   

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்ற முதலமைச்சர் விஜய், அடுத்த ஒரே நாளில் சமூக நீதித் துறை மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அதிரடியாகத் தீர்வு கண்டுள்ளார். அதன்படி, மாணவர்களுக்குத் தரமான உணவு வழங்க ஏதுவாக விடுதி உணவுப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதோடு, எரிவாயு தட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டிருந்த இட்லி மற்றும் சப்பாத்தி ஆகியவை மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த வாலிபால் மைதானம் மாணவர்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளதோடு, பகுதி நேரப் பணிக்குச் செல்லும் மாணவர்கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் நுழைய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. உணவின் தரத்தைக் கண்காணிக்கச் சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.