“இரவு 10 மணிக்கு மேல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?”… டெல்லி காவல்துறையை கிழித்து தொங்கவிட்ட உச்ச நீதிமன்றம்….!

By Nanthini on ஐப்பசி 5, 2026

Spread the love

தேசியத் தலைநகர் தில்லியில் பெண்கள் இரவில் தெருக்களில் நடமாடும்போதும் அல்லது மெட்ரோ போன்ற பொதுப்போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும்போதும் தங்களை முழுப் பாதுகாப்போடு உணர வேண்டும் என்று மத்திய அரசுக்கும் தில்லி காவல்துறைக்கும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தில்லி-என்சிஆர் பகுதியில் அண்மையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான தானாக முன்வந்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்தபோது இந்த அறிவுறுத்தல்களை வழங்கியது. “குற்றம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, அது நடப்பதற்கு முன்பே தடுப்பதே மிக முக்கியமானது” எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சட்ட அமலாக்கம் களத்தில் வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

முந்தைய உத்தரவுகளின் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை போலிஸ் சூப்பிரண்டு தகுதிக்குக் குறையாத அதிகாரி தலைமையில் தனிப்படைகளை அமைத்து, பாதுகாப்பற்ற இடங்களைக் கண்டறிந்து வரைபடமாக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. குறிப்பாக, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், பூங்காக்கள் மற்றும் போக்குவரத்து மையங்களில் மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், நகரின் போதிய வெளிச்சமின்மை, பலவீனமான கண்காணிப்பு மற்றும் மெத்தனமான ரோந்துப் பணி போன்றவை குற்றங்களுக்குச் சாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதால், பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின் விளக்குகளின் நிலையைத் தணிக்கை செய்து உடனடியாகச் சீரமைக்க உத்தரவிட்டுள்ளது.

   

கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி, ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, ஸ்வரூப் நகரில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பல அதிர்ச்சி சம்பவங்களைக் கவனத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை எடுத்தது. 2012-ஆம் ஆண்டின் நிர்பயா சம்பவத்திற்குப் பிறகும் பொதுப் பாதுகாப்பில் அடிப்படை குறைபாடுகள் தொடர்வதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இம்முறை வெறும் காகித அளவிலான அறிக்கைகளை ஏற்க முடியாது என்றும், நடைமுறையில் சாத்தியமான உறுதியான மாற்றங்களைக் களத்தில் செய்து காட்ட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.