தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேமுதிக தனது பலத்தை நிரூபிக்க வலுவான கூட்டணியை எதிர்நோக்கி திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. திமுக தரப்பில் 6 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க முன்வந்துள்ள நிலையில், அதிமுக 8 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளது. இருப்பினும், தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளையும், அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் மத்திய மந்திரி பதவியையும் தேமுதிக வலியுறுத்தி வருகிறது. கட்சிக்குள் நிலவும் கடும் போட்டியும், மூத்த நிர்வாகிகளின் எதிர்பார்ப்புகளுமே இந்த கூடுதல் தொகுதிகளுக்கான கோரிக்கைக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, முன்னாள் எம்.எல்.ஏ.க்களான மோகன்ராஜ், பார்த்தசாரதி, வெங்கடேசன் உள்ளிட்டோரும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இளங்கோவன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் மீண்டும் களமிறங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், பிரேமலதா விஜயகாந்த், விஜய் பிரபாகரன் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோரும் தேர்தலில் போட்டியிட உள்ளதால், குறைந்தது 10 தொகுதிகள் இருந்தால் மட்டுமே உட்கட்சி அழுத்தத்தைச் சமாளிக்க முடியும் என்ற சூழலில் தே.மு.தி.க. உள்ளது. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இரு கூட்டணிகளும் கேட்ட தொகுதிகளைத் தர முன்வராததால் தகுந்த முடிவெடுக்க முடியாமல் கட்சித் தலைமை தற்போது திணறி வருகிறது.
