நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தொகுதி மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி செலுத்தினார். விருதகிரீஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் தான் பேசியது வெறும் அறிமுகப் பேச்சுதான் என்றும், வரவிருக்கும் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளின் போது தனது தேர்தல் வாக்குறுதிப்படி, விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று முழு முயற்சி எடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.
தமிழக அரசின் சில முக்கிய நடவடிக்கைகளைப் பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த், தவறுகள் நடக்கும்போது எதிர்க்கட்சியாக அதைச் சுட்டிக்காட்டுவது கேப்டன் விஜயகாந்த் கற்றுக்கொடுத்த பாடம் என்று குறிப்பிட்டார். குறிப்பாக, 717 மதுபானக் கடைகளை மூடியதற்கும், பள்ளி மற்றும் கோயில்களுக்கு அருகிலிருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றியதற்கும் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார். பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்படை’ அமைத்த தமிழக அரசின் நடவடிக்கையையும், ரத்தன் பண்டிட் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தான் எழுப்பிய கேள்விக்கு அடுத்த சில நிமிடங்களிலேயே அரசு எடுத்த நடவடிக்கையையும் அவர் மனதார வரவேற்றார்.
அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய பிரேமலதா, அதிமுகவிலிருந்து பிரிந்து வந்தவர்கள் தற்போதைய ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்தால் அதனை வரவேற்கலாம் என்றார். அவ்வாறு இல்லாமல், திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் மூலம் ‘குதிரை பேரம்’ நடந்தால், அது தமிழகம் இதுவரை கண்டிராத தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும், இதுகுறித்து முதலமைச்சர் வெளிப்படையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி விவகாரம் குறித்துப் பேசிய அவர், தேமுதிகவிற்கு மாநிலங்களவை (எம்.பி) சீட் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றவில்லை என்று சி.வி. சண்முகம் கூறிய குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை என்று உறுதிபடக் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலின்போது தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் தருவதாக அதிமுக தரப்பில் கையெழுத்திட்டுக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தை ஏற்கனவே திருவண்ணாமலையில் ஆதாரப்பூர்வமாகக் காட்டியுள்ளதை நினைவுகூர்ந்தார். ஒப்பந்தம் செய்த பிறகு, “யார் யாரோ சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது” என்று எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் யாருக்குமே உகந்ததாக இல்லை என்றும், இதையேதான் சி.வி.சண்முகமும் சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
