“அண்ணன் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்!” – தேர்தல் முடிவுக்கு முன்பே தேமுதிக கொடுத்த ஷாக் ஸ்டேட்மென்ட்… செய்தியாளர் சந்திப்பில் வெடித்த பிரேமலதா விஜயகாந்த்…!

By Nanthini on வைகாசி 1, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். கடந்த மாதம் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த சூழலில், வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. திமுக ஆட்சியைத் தக்கவைக்கப் போராடும் அதே வேளையில், அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய கட்சிகளும் தீவிரமான களப்பணியை மேற்கொண்டுள்ளன. இவற்றுக்கிடையே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவின் நிலைப்பாடு மற்றும் பிரேமலதாவின் சமீபத்திய பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளன.

தனது கட்சிக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்த பிரேமலதா, “பழுத்த மரம் தான் கல்லடிபடும்” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி தனது உறுதியை வெளிப்படுத்தினார். கடந்த பல மாதங்களாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களின் கவனம் தேமுதிக மீதே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விமர்சனங்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்று கூறினார். விமர்சிப்பவர்களை ‘வாழ்க வசவாளர்கள்’ எனப் பதிவிட்ட அவர், மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது அத்தனை கேள்விகளுக்கும் தகுந்த பதில் கிடைக்கும் எனச் சவாலளித்தார்.

   

இந்தத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டுள்ள 10 வேட்பாளர்களும் கேப்டன் விஜயகாந்தின் ஆசியுடன் நிச்சயம் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், வீணான கற்பனைகளோ அல்லது மிகையான எதிர்பார்ப்புகளோ தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், பொறுமையாகக் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். இறுதியில், தங்களின் மதச்சார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.