தமிழகத்தில் பொங்கல் பரிசு விநியோகத்தை சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்றைய தினமே அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் பரிசு தொகை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்திற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை கூட்டுறவு துறை அதிகாரிகள் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருள்களும் அனுப்பப்பட்டுள்ளது. ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இருக்கும் பகுதிக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3000 ரூபாய் ரொக்க தொகையை பயனாளிகள் முன்பு எண்ணி வெளிப்படையாக வழங்க வேண்டும் என்றும் பொங்கல் பண்டிகை வரை ரேஷன் கடை ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலைவாழ் பகுதி மக்கள் அதிகாலையிலையே வேலைக்கு கிளம்புவதால் மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ரேஷன் கடைகள் காலை 6:00 மணிக்கே திறக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. பொங்கல் பரிசு விநியோகம் பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்றோடு நிறைவடைந்த நிலையில் இதுவரை டோக்கன் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்களை அணுகி பொங்கல் பரிசு தொகுப்புகளை அவர்கள் குறிப்பிடும் நாட்களில் வந்து பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
