தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், கோவை மாநகர காவல்துறை பொதுமக்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஸ்டார்பக்ஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி, “பொங்கல் பரிசு” அல்லது “கூப்பன்கள்” காத்திருப்பதாகக் கூறி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மர்ம நபர்கள் போலியான லிங்குகளை (Links) பரப்பி வருகின்றனர். இந்த லிங்குகளை கிளிக் செய்யும் போது, ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரை பரிசு கிடைக்கும் என்று ஆசை காட்டி மக்களின் வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைத் திருடி மோசடி செய்ய முயற்சிகள் நடைபெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், தாங்கள் இது போன்ற எந்த ஒரு சலுகையையும் அறிவிக்கவில்லை என்றும், இச்செய்திகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற அறிமுகமில்லாத இணையதள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான தகவல்களை மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பணத்தை இழக்கும் அபாயம் உள்ளதால் விழிப்புடன் இருக்குமாறும், மோசடி தொடர்பான புகார்களுக்கு உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
