சிவகங்கை மாவட்ட முன்னாள் ஊராட்சிக் குழு தலைவரும், அதிமுகவின் மாநில அம்மா பேரவை துணை செயலாளருமான பொன்.மணி பாஸ்கரன், அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். சிங்கம்புணரி எஸ்.புதூர் அருகே உள்ள பொன்னடப்பட்டியைச் சேர்ந்த இவர், சென்னையில் தொழிலதிபராக வலம் வருபவர். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சிவகங்கை மாவட்ட கவுன்சிலின் 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் மாவட்ட சேர்மன் பதவியையும் அலங்கரித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட இவர் விருப்பம் தெரிவித்து சீட் கேட்டிருந்த நிலையில், அந்தத் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கட்சியில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் அவர் தற்போது விலகும் முடிவை எடுத்துள்ளார்.
கட்சியிலிருந்து விலகும் தனது முடிவை அறிவித்த பொன்.மணி பாஸ்கரன், செய்தியாளர் சந்திப்பின் போது மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களின் முன்பாக சூடம் ஏற்றி, கண்ணீர் மல்க அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஐயா புரட்சித்தலைவரே… நீங்கள் உருவாக்கிய இயக்கம் இன்று சீரழிந்து கொண்டிருக்கிறது. என்னை போன்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆணிவேராய் தாங்கிப் பிடித்த இயக்கத்தை விட்டுவிட்டு நான் செல்கின்றேன். இன்னும் பல பேரை இப்படி செல்ல வைத்துவிடாதீர்கள்” என்று எம்.ஜி.ஆரின் படத்தை நோக்கி உருகிப் பேசினார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்த அவர், “முடிந்தால், பொதுச்செயலாளருக்கு கொஞ்சம் கருணை காட்டுங்கள், எல்லோரையும் அரவணைத்துச் செல்லச் சொல்லுங்கள். குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தை இங்கிருக்கும் மாவட்ட கழகச் செயலாளரிடமிருந்து (பி.ஆர்.செந்தில்நாதன்), மாவட்ட அவைத் தலைவரிடமிருந்தும் காப்பாற்றுங்கள் என்று அவருக்குச் சொல்லிக் கொடுங்கள். பாவம் நிர்வாகிகள், பாவம் தொண்டர்கள்” என்று வேதனையுடன் குறிப்பிட்டார். தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த அவர், போயஸ் கார்டன் இல்லத்தில் தாம் உணவருந்திய பழைய நினைவுகளையும், இதுகுறித்து போயஸ் கார்டன் மேலாளர் பூங்குன்றனிடம் தொலைபேசியில் கண்ணீருடன் பேசியதையும் பகிர்ந்து கொண்டார்.
அதிமுகவை விட்டு விடைபெறுவதாகக் கூறிய பொன்.மணி பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு எதிராகக் கடுமையான சாபங்களையும் முன்வைத்தார். “இந்தத் துரோகிகளுக்கு, சிவகங்கை மாவட்டத்தைச் சீரழித்த நயவஞ்சகக்காரர்களுக்குத் தண்டனை கொடுங்கள். அரசியலிலே அவர்கள் வாழாவெட்டியாகப் போக வேண்டும். இத்தோடு அவர்கள் தொலைந்து போகவேண்டும்; முகவரியற்ற மனிதர்களாகச் சிவகங்கையிலே வாழ வேண்டும்” என்று ஆவேசமாகச் சாபமிட்டார். அதிமுகவிலிருந்து விலகியுள்ள பொன்.மணி பாஸ்கரன், அடுத்தகட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பலத்த தகவல் வெளியாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…
வாரணாசியில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த ரயிலில், பயணிகள் அனைவரும் தங்களது சொந்த உலகத்தில் மகிழ்ச்சியாகப்…
அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற தமிழக…
கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித், அவனது தாய் அகிலா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஷ்கர் ஆகியோரால் கொடூரமாக அடித்துக்…