“காக்கிச் சட்டையில் கறுப்பு ஆடுகள்”.. சிரித்துக்கொண்டே மொபைல் ஷோரூமில் கைவரிசை காட்டிய காவலர்கள்… சிசிடிவி ஆதாரத்தால் அதிரடி சஸ்பெண்ட்..!!

By Soundarya on மாசி 11, 2026

Spread the love
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவலர்களே பட்டப்பகலில் துணிகரமாகத் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மொபைல் ஷோரூமிற்குள் நுழைந்த காவலர்கள் மிதிலேஷ் யாதவ் மற்றும் தனஞ்சய் பிந்த் ஆகியோர், அங்கிருந்த விலையுயர்ந்த போன்களைத் திருடிவிட்டு எவ்வித பயமும் இன்றிச் சிரித்துக் கொண்டே வெளியேறியுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவம் முழுவதும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து காவல்துறைக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு அந்த செல்போன்களை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். புக்சா மற்றும் லால்பஜார் காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்களும் உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டதற்காகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.