விஜய் ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்?… கையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்கள்… செந்தில் பாலாஜி தம்பிக்கு வலைவீச்சு…. உச்சக்கட்ட பரபரப்பு….!

By Nanthini on ஆடி 2, 2026

Spread the love

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய ‘அரசியல் யுத்தம்’ வெடித்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக எழுந்த புகார், இப்போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான நேரடி மோதலாக மாறியுள்ளது. தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம், சட்டசபை சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க ஒரு கன்சல்டன்சி நிறுவனம் மூலம் 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், சென்னை போலீசார் அதிரடியாக மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் ஒருவர் அசோக் குமாருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் நிலையில், ஒரே நேரத்தில் 15 தவெக எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்க ரகசியத் திட்டம் தீட்டப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான தவெக-வும் எதிர்க்கட்சியான திமுக-வும் பரஸ்பரம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இதுகுறித்து தவெக மூத்த தலைவரும் அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், தங்களது எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முயன்று திமுக கையும் களவுமாக சிக்கியுள்ளதாகவும், கடந்த 40 நாட்களாக நடந்து வரும் இந்த சதிக்குப் பின்னால் முன்னாள் முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் இருப்பதாகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், முதலமைச்சர் விஜய் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதை மறைக்கவே இப்படி ஆதாரமற்ற புகார்களைக் கூறுவதாகப் பதிலடி கொடுத்துள்ளார். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏ-க்களை இழுப்பதுதான் தவெக-வின் வேலை என்று தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.

   

தற்போது இந்த குதிரை பேரப் புகார் தொடர்பாக செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மீது 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அசோக் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீஸார் கரூரில் உள்ள அவரது ராமகிருஷ்ணாபுரம் இல்லத்திற்குச் சென்று தீவிர சோதனை நடத்தினர். மேலும், அவரது வீட்டின் அருகே உள்ள கடைகளிலும் அவர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது வரை அசோக் குமார் இருக்கும் இடம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர் தலைமறைவாகியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.