நெஞ்சை பதறவைக்கும் சோகம்: வாந்தி எடுத்ததால் சாலையோரம் நிறுத்திய பைக்.. காரை ஏற்றி 5 வயது சிறுமியை கொன்ற தலைமைக்காவலர்..!!

By Soundarya on வைகாசி 29, 2026

Spread the love

திருவள்ளூர் அருகே சென்னை – திருப்பதி புறவழிச்சாலையில் அயத்தூர் பகுதியில், நெடுஞ்சாலையோரம் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருநின்றவூரைச் சேர்ந்த சாந்தகுமார் – ரம்யா தம்பதியரின் 5 வயது மகள் தானிகா சாரா, தனது தாயின் சக ஊழியரான குணசேகரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமிக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதால், சாலையோரமாக வாகனத்தை நிறுத்தியிருந்தபோது இந்த சோக விபத்து நிகழ்ந்துள்ளது.

அவ்வழியாக அதிவேகமாக வந்த மாருதி எர்டிகா கார் ஒன்று, நிலைதடுமாறி சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் சிறுமி தானிகா சாரா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த குணசேகரன் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

   

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது செவ்வாப்பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர் விக்ரமன் என்பது தெரியவந்தது. அவர் தனது குடும்பத்தினருடன் திருவாலங்காடு நோக்கிச் சென்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதையடுத்து விக்ரமனை கைது செய்த போலீசார், அவரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்த 30 நாட்களுக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தலைமைக்காவலர் விக்ரமனை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.