10 நாள் மர்மம்… CCTV-யில் சிக்கிய 2 கார்கள்… ஹோட்டல் பழக்கம்… கள்ளக்காதல்… நள்ளிரவு கொலை… காதலனுடன் வாழ கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி…!!

By Gayathri on ஐப்பசி 7, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே உள்ள ஒரு தோட்டத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பது தெரியவந்துள்ளது. தனது மனைவி அம்சா நிஷா மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்த இவர், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

குற்றவாளிகளைப் பிடிக்க பண்பொழி – தென்காசி சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற இரண்டு கார்களைக் கண்டறிந்தனர். இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில், கொலை நடப்பதற்கு முன்பு இசை இந்திரகுமார் என்பவர் அப்துல் ரஹ்மானை தனது காரில் அழைத்துச் சென்றது அம்பலமானது. உடனடியாக அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கொலையின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.

   

உணவக ஊழியரான இந்திரகுமாருக்கும், அங்கு அடிக்கடி சென்று வந்த ரஹ்மானின் மனைவி அம்சா நிஷாவிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது விசாரணையில் தெரியவந்தது. சமீப காலமாக அப்துல் ரஹ்மான் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், தங்களது தகாத உறவுக்கு அவர் தடையாக இருப்பதாக இருவரும் கருதியுள்ளனர். தங்களின் கள்ளக்காதலைத் தொடர, மனைவியும் அவரது காதலனும் இணைந்து சதித்திட்டம் தீட்டி ரஹ்மானை கொடூரமாகத் தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.