பெங்களூருவில் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்ட காவல் ஆய்வாளர் ஒருவர், ஒரு குழந்தையைப் போல அழுது ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கே.பி. அக்ரஹாரா காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த கோவிந்தராஜு என்பவர், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரை மோசடி வழக்கிலிருந்து விடுவிக்க 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து அந்த தொழிலதிபர் லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆய்வாளர் கோவிந்தராஜுவிடம் கொடுத்தபோது மறைந்திருந்த அதிகாரிகள் அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தருணத்தில், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நினைத்த ஆய்வாளர் கோவிந்தராஜு, தனது தவற்றை உணர்ந்து வருந்துவதற்குப் பதிலாக, நடுரோட்டில் ஒரு சிறிய குழந்தையைப் போல சத்தமிட்டு அழுது கூச்சலிட்டார். “என்னை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சியபடி அவர் செய்த இந்த அலப்பறை அங்கிருந்தவர்களையும், அதிகாரிகளையும் திகைக்க வைத்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு காவல் உயர் அதிகாரியே லஞ்சம் வாங்கிவிட்டு இவ்வாறு சிறுபிள்ளைத்தனமாக அழுது ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
