பீகாரின் பெகூசராயில் உள்ள முசாபில் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பங்காச்சி சவுக் அருகே நவ்ராத்திரி விழாவை ஒட்டி ஜாக்ரன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 3 மணி அளவில் பாதுகாப்புக்காக அங்கு சென்ற காவல் ஆய்வாளர் ஒருவர், நேரக் கட்டுப்பாட்டைக் காரணம் காட்டி நிகழ்ச்சியை உடனே நிறுத்தும்படி கூறியுள்ளார்.
நிகழ்ச்சியை நிறுத்த முயன்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மேடையில் இருந்த பெண் நடனக் கலைஞரை அந்த காவல் ஆய்வாளர் அறைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தட்டிக்கேட்ட பொதுமக்களை நோக்கி அவர் தனது துப்பாக்கியை நீட்டியதாகவும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பெகூசராயின் எஸ்பி மணிஷ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சதா 01 துணைப் பிரிவு காவல் அலுவலர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
