குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் அண்டை வீட்டுக்காரரின் காரில் அமைக்கப்பட்டிருந்த சென்சார், தான் கடந்து செல்லும்போதெல்லாம் அலாரத்தை எழுப்பியதால் கடும் விரக்தியடைந்த நபர் ஒருவர், அக்காரை தீயிட்டுக் கொளுத்திய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. வழக்கறிஞர் ஒருவரின் வீட்டின் முன் நின்றிருந்த மாருதி ஸ்விஃப்ட் வாகனத்தை குறிவைத்து, அதன் மீது எரியக்கூடிய திரவத்தை ஊற்றி தீ வைக்கப்பட்டதில், காரின் பெரும்பகுதி நாசமாகி சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து ஒலித்த சென்சார் சத்தத்தால் பொறுமை இழந்த அந்த நபர், ஆத்திரத்தின் உச்சத்தில் இத்தகைய நாசவேலையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் அளித்த தகவலின் பேரில் உடனடியாக களமிறங்கிய உள்ளூர் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை அதிரடியாகக் கைது செய்தனர். அற்ப காரணத்திற்காக வாகனத்திற்கு தீ வைத்த இச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
