கர்நாடக மாநிலம் பெங்களூருவில், உபேந்திரா என்பவர் தனது மனைவி அனிதா மற்றும் அவரது ஆண் நண்பர் மதுசூதன் ரெட்டி ஆகியோரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவுக்கும் மதுசூதன் ரெட்டிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், இதை அறிந்த உபேந்திரா இருவரையும் கண்டித்து எச்சரித்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் உபேந்திரா தங்களது உறவுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதிய இருவரும் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அக்டோபர் 12-ம் தேதி அதிகாலை அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை நெரித்தும், மூக்கு மற்றும் வாயை மூடி மூச்சுத்திணறச் செய்தும் கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் குளியலறைக்குச் செல்லும்போது தவறி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்ததாகக் குடும்பத்தினரிடம் கூறி நாடகமாடியுள்ளனர்.
ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உபேந்திராவின் மரணம் மூச்சுத்திணறல் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் மதுசூதன் ரெட்டி மற்றும் அனிதா ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இருவரையும் கைது செய்தனர். தற்போது இருவரும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
