பூவிருந்தவல்லியில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, தொழிலதிபர் வீட்டிற்குள் புகுந்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், தமிழக வெற்றிக் கழக பிரமுகர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பூவிருந்தவல்லி ராமானுஜ கூட தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திக் மாதவன் என்பவருக்கும், அவரது உறவினரும் தவெக பிரமுகருமான நாராயணன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சாலையில் சென்றுகொண்டிருந்த கார்த்திக் மாதவனிடம் நாராயணன் மற்றும் அவரது கூட்டாளிகள் இனோவா காரில் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் மாதவன் தனது வீட்டிற்குத் திரும்பிய சில நிமிடங்களிலேயே, நாராயணன் தனது கூட்டாளிகளுடன் அத்துமீறி அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த கார்த்திக் மாதவன் மற்றும் அவரது தந்தையை அவதூறான வார்த்தைகளால் பேசிய அந்த கும்பல், கைகளாலும் கட்டையாலும் சரமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இந்த கொடூர தாக்குதல் குறித்து கார்த்திக் மாதவன் அளித்த புகாரின் பேரில், தவெக பிரமுகர் நாராயணன், விஜி, தியாகு, கோவிந்தன், கண்ணப்பன் உள்ளிட்ட 6 பேர் மீது பூவிருந்தவல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே வேளையில், நாராயணன் அளித்த மற்றொரு புகாரின் அடிப்படையில் கார்த்திக் மாதவன் உட்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணையின் போது, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் குறித்து போலீசாருக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தச் சொகுசு கார் டெல்லி மாநிலப் பதிவெண் கொண்டது (Delhi Registration) என்பது தெரியவந்துள்ளது. அந்த டெல்லி காரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இருசக்கர வாகனத்தின் (Two-Wheeler) போலி பதிவு எண்ணைப் பொருத்தி, நாராயணன் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வந்தது தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
சட்டவிரோதமாகப் போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட இந்தச் சொகுசு காரில், தவெக பிரமுகரான நாராயணன் பந்தாவாக வலம் வரும் காட்சிகளை யூடியூப் (YouTube) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ ஆகப் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அவர் வீடு புகுந்து தாக்கிய வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து, அவர் சமூக வலைத்தளங்களில் பந்தா காட்டிய கார் ஒரு போலி வாகன எண் கொண்டது என்ற விபரம் இணையத்தில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகிறது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தச் சொகுசு காரை பூவிருந்தவல்லி காவல்துறையினர் தற்பொழுது பறிமுதல் செய்துள்ளனர். அந்த காரின் பதிவு எண் மட்டும்தான் போலியாகப் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது அந்த காரே எங்கிருந்தாவது திருடப்பட்ட வாகனமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலி நம்பர் பிளேட்டுடன் வலம் வந்த தவெக பிரமுகர் தொழிலதிபர் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்திய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…