“என்னை விட்ருங்க சார்…” கெஞ்சிய சிறுவன்…! அடித்து தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

By Devi Ramu on சித்திரை 27, 2026

Spread the love

பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளி பகுதியில், அதிகாலையில் டீக்கடை திறந்து வைத்திருந்த சிறுவன் ஒருவனை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகளுக்காக அதிகாலை 4 மணிக்கே கடையைத் திறந்து வேலை செய்துகொண்டிருந்த அந்தச் சிறுவனை, ஆய்வாளர் ராகேஷ் தலைமையிலான குழுவினர் கடையை விட்டு வெளியே இழுத்து வந்து லத்தியால் தாக்கியுள்ளனர். தான் பிழைப்புக்காகவே கடை திறந்ததாக அந்தச் சிறுவன் கெஞ்சியும், காவல்துறையினர் அதைக் காதுகொடுத்துக் கேட்காமல் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆனாலும், தற்போது வீடியோ வைரலான பிறகுதான் அதிகாரிகளின் அராஜகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல்துறை தரப்பில் கடை திறந்திருந்த நேரம் விதிமுறை மீறல் என்று கூறப்பட்டாலும், ஒரு ஏழைத் தொழிலாளி மீது இவ்வளவு வன்முறையைப் பிரயோகிப்பது அதிகார துஷ்பிரயோகம் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளே பொதுமக்களைத் தாக்குவது வேதனையளிப்பதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது உயர்மட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.