மத்திய பிரதேச மாநிலம் போபாலில், சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆகாஷ் பாஜ்பாய் என்ற இளைஞர், தனது ஆடம்பரமான திருமணச் செலவுகளுக்காகப் பணம் தேவைப்பட்டதால், பூசாரி ஒருவரைக் கடத்தி ‘ஹனி ட்ராப்’ மூலம் மிரட்டிப் பணம் பறிக்கும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். சஞ்சீவ் என்ற பூசாரியைத் திட்டமிட்டு வரவழைத்த இந்தக் கும்பல், அவரைச் சிறைபிடித்து பொய்யான பாலியல் புகார் கூறி மிரட்டி, ஆரம்பக் கட்டமாக 50 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு, மேலும் 7.5 லட்சம் ரூபாய் கேட்டுத் துன்புறுத்தியுள்ளனர்.
பணம் பறிக்கப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட பூசாரி, பயந்து ஓடாமல் தைரியமாகப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் துரிதமாகச் செயல்பட்ட போலீசார், தீவிர விசாரணைக்குப் பிறகு முக்கியக் குற்றவாளியான ஆகாஷின் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். துரதிர்ஷ்டவசமாக, அதே நாளில் ஆகாஷின் திருமணம் நடைபெறுவதை அறிந்த போலீசார், மணமகன் மஞ்சள் பூசும் (ஹல்தி) சடங்கில் மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தபோதே திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அதிரடியாகக் கைது செய்தனர்.
திருமண மேடையிலேயே மாப்பிள்ளை கைது செய்யப்பட்டதும், மணப்பெண் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். தனது கைகளில் மருதாணி (மெஹந்தி) இட்டிருந்த மணப்பெண், அழுதுகொண்டே போலீசாரிடம், “இன்னும் 2 மணி நேரம் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள், எனக்குத் தாலி கட்டிய பிறகு இவரை அழைத்துச் செல்லுங்கள்” என்று கதறி கெஞ்சினார். இருப்பினும், குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்ட போலீசாரும் நீதிமன்றமும் அந்த வேண்டுகோளை நிராகரித்தனர்.
ஆகாஷ் போலீசாரிடம் நடத்திய விசாரணையில், பூசாரியிடம் பறித்த பணத்தில் ஒரு பகுதியைத் தனது திருமணச் சடங்குகளுக்காக ஏற்கனவே செலவு செய்துவிட்டதை ஒப்புக்கொண்டார். ஆகாஷுடன் சேர்ந்து கடத்தலில் ஈடுபட்ட மற்ற கூட்டாளிகளையும் கைது செய்த போலீசார், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். திருமணப் பந்தம் பாதியிலேயே முறிந்த இந்தச் சம்பவம், போபால் பகுதியில் பெரும் பரபரப்பையும், மணப்பெண்ணின் பரிதாப நிலை அங்கிருந்தோரை மிகுந்த சோகத்திலும் ஆழ்த்தியது.
