பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் கட்சியின் விதிகளுக்கு புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அன்புமணி பதிலளிக்காததால் அவரை கட் செய்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் ராமதாஸ் அறிவித்தார்.
இந்நிலையில் கட்சியின் புதிய செயல் தலைவராக தன்னுடைய மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், என்னுடைய மகள் ஸ்ரீகாந்தி கட்சிக்கும் எனக்கும் பாதுகாப்பாக இருப்பார். செயல் தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கினேன். அதனை ஒருவர் வேண்டாம் என்று கூறிவிட்டார். எனவே என்னுடைய பெரிய மகளுக்கு அந்தப் பதவியை வழங்குகிறேன் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி மற்றும் ராமதாஸ் மோதல் முற்றியுள்ள சூழலில் மகளுக்கு தற்போது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பாமகவில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
