BREAKING: தவெக அமைச்சரவையில் பாமக?…. சௌமியா அன்புமணி நச் பதிலால் ஆடிப்போன அரசியல் களம்…..!

By Nanthini on ஐப்பசி 31, 2026

Spread the love

தவெக தலைமையிலான அமைச்சரவையில் பாமக இணையக்கூடும் என்ற பரவலான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி தற்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாமக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற பேச்சுக்களும் கருத்துக்களும் மகிழ்ச்சி அளித்தாலும், தற்காலத்தில் தவெக அமைச்சரவையில் பங்கேற்கும் எண்ணம் அல்லது யோசனை எதுவும் தங்களிடம் இல்லை என்பதைத் திட்டவட்டமாக விளக்கியுள்ளார்.

முன்னதாக, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களின் போது பாமக எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகித்தது. இதனால் பாமகவின் வாக்குகள் தவெக பக்கம் திரும்பியதாகக் கருதப்பட்ட நிலையில், அதிமுக – பாமக இடையிலான உறவிலும் விரிசல் ஏற்பட்டது. சரியான நேரத்தில் பாமக தங்களை விடுத்துச் சென்றுவிட்டதாக அதிமுகவினர் விமர்சித்த அதேவேளையில், பாமக – தவெக இடையிலான நெருக்கம் அதிகரித்தது. இருப்பினும், தவெக கூட்டணியில் பாமக இணைந்தால் தாங்கள் வெளியேறுவோம் என்று விசிக தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாகக் குறைந்தன.

   

அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் கூட்டணி குறித்த ஊகங்களுக்குப் பதிலளித்த சௌமியா அன்புமணி, தமிழக அரசுக்கு ஆக்கப்பூர்வமான மற்றும் பொறுப்புள்ள ஆலோசனைகளை வழங்கும் இடத்திலேயே பாமக தொடரும் என்று குறிப்பிட்டார். ஆட்சியில் பங்கு வகிப்பதை விட, மக்களுக்காகக் குரல் கொடுக்கும் வலிமையான எதிர்க்கட்சியாகச் செயல்படுவதே தங்களின் முதன்மையான குறிக்கோள் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், தற்காப்பு கலைகளில் முறையான பயிற்சி பெற்ற பெண்களைக் காவல்துறை பணிக்கு தேர்வு செய்தால் ‘சிங்கப்பெண் படை’ மேலும் வலிமையடையும் என்றும் தமிழக அரசுக்கு அவர் யோசனை தெரிவித்தார்.

   

தற்போதைய சூழலில் தவெக அமைச்சரவையில் பாமக பங்கேற்காது என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், அரசியல் களத்தில் மாற்றங்கள் இயல்பானவை என்பதால், வரவிருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி மற்றும் அமைச்சரவை குறித்த சூழலில் புதிய திருப்பங்கள் ஏற்படக் கூடும் என்று அரசியல் வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.