கருத்து வேறுபாடு காரணமாக பிளவு பட்ட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. கூட்டணி குறித்த அறிவிப்பை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். பாஜகவின் தமிழக அரசியல் பயணம் என்பது சற்று சறுக்கல் நிறைந்ததாக இருக்கின்றது. திராவிட கொள்கைகளால் தமிழகம் சூழப்பட்டிருக்கும் சூழ்நிலையில் பாஜகவின் கொள்கை முரண்பட்டதாகவே உள்ளது.
இருந்தாலும் தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக அதிமுகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணி தற்போது பலமாக மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் பல கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என தெரிகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுகவுடன் சேர்ந்து சந்திக்க பாமக முடிவு செய்துள்ள நிலையில் இன்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை இபிஎஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் வெளியிட்டனர்.
இந்நிலையில் நீண்ட இழுப்பறிக்கு பிறகு அதிமுகவுடன் இணைந்துள்ள பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளதை உறுதி செய்த இ பி எஸ் தொகுதிகள் குறித்த விவரங்களை பிறகு அறிவிப்போம் என்றார். ஆனால் பாமக தரப்பில் தங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியல் ஒன்றை அளித்துள்ளது. அதில் தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் திருப்பத்தூரில் இட்ட தொகுதிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
