“23 டூ 18… ராஜ்யசபா சீட் பிளான்”… அதிமுக – பாமக டீலில் இவ்வளவு ட்விஸ்டா?… கசிந்த ரகசிய தகவல்…!

By Nanthini on மாசி 25, 2026

Spread the love

வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக மற்றும் பாமக இடையிலான தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2021 தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு, இந்த முறை 18 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக தரப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பாமக இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ள நிலையில், அக்கட்சியின் வாக்கு வங்கி மற்றும் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அதிமுக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த முறையை விட 5 தொகுதிகள் குறைக்கப்பட்டாலும், ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படுவது பாமக தலைமைக்கு ஒரு முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், வடதமிழகத்தில் இந்த கூட்டணி மற்ற கட்சிகளுக்குப் பலத்த சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.