“தேர்தல் பரபரப்புக்கு நடுவே திடீரென காரை நிறுத்திய பிரதமர்”… திரிஷா பாணியில் செய்த செயல்… மேற்கு வங்க மக்களை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்…!

By Nanthini on சித்திரை 20, 2026

Spread the love

மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று அங்கு நான்கு முக்கியப் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார். ஜார்கிராம் பகுதியில் தனது பிரசாரத்தை முடித்துவிட்டு ஹெலிபேட் நோக்கிச் சென்றபோது, திடீரென தனது வாகனத்தை நிறுத்தி சாலையோரக் கடை ஒன்றில் இறங்கினார். அங்கு விற்கப்படும் மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற ‘ஜால்முரி’ (காரப்பொறி) சிற்றுண்டியை வாங்கி, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடியபடி அதனைச் சுவைத்தார்.

இந்தச் சம்பவம் ‘கில்லி’ திரைப்படத்தில் நடிகர் விஜய், திரிஷாவிற்குப் பதற்றமான சூழலில் காரப்பொறி வாங்கித் தரும் காட்சியைப் பலருக்கும் நினைவுபடுத்தியது. தேர்தல் பரபரப்புக்கு மத்தியிலும் பிரதமர் மிகவும் நிதானமாக மக்களுடன் இணைந்து இந்தச் சிற்றுண்டியை உண்டது வைரலாகி வருகிறது. தான் வாங்கிய ‘ஜால்முரி’க்காக வியாபாரி பணம் வாங்க மறுத்தபோதும், பிரதமர் மோடி பிடிவாதமாக அவருக்குப் பணத்தை வழங்கிய நெகிழ்ச்சியான நிகழ்வும் அங்கு அரங்கேறியது.

   

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “மேற்கு வங்கத்தின் ஜார்கிராமில் நான்கு பேரணிகளுக்கு இடையே சுவையான ஜால்முரியைச் சாப்பிட்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். பொரி, மசாலா, வெங்காயம் மற்றும் வேர்க்கடலை சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த ஜால்முரி, அந்த மாநிலத்தின் அடையாளமாகத் திகழும் ஒரு காரமான சிற்றுண்டியாகும்.

   

தேர்தல் பிரசாரங்களின்போது பிரதமர் மோடி இதுபோன்று எளிய மக்களுடன் இணைந்து சாலையோரக் கடைகளில் உணவருந்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலும் அவர் உள்ளூர் உணவுகளையும் தேநீரையும் சுவைத்துள்ளார். தற்போது மேற்கு வங்கத்திலும் அவர் மேற்கொண்டுள்ள இந்தச் செயல், உள்ளூர் மக்களிடையே பெரும் உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.