கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் இட ஒதுக்கீடு தொடர்பாகத் தனது நீண்ட நாள் ஆசை முழுமையாக நிறைவேறவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு பெண்கள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு, அது தொடர்பான விவரங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தபோது, பல்வேறு கட்சிகளிடம் தனிப்பட்ட முறையில் ஆதரவு கோரியதாக அவர் குறிப்பிட்டார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் உருக்கமாகப் பேசினார்.
பெண்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் சூழல் குறித்துப் பேசிய அவர், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்றத்தில் பெண்களுக்குப் கூடுதல் இடங்கள் கிடைக்கும் நிலை இருந்தும், அது தற்போது நடைமுறைக்கு வராதது துரதிஷ்டவசமானது என்றார். பெண்களின் அதிகாரம் மற்றும் அவர்களின் அரசியல் பங்கேற்பு குறித்த தனது விருப்பம் இன்னும் முழுமை பெறாதது குறித்துத் தனது விரக்தியை வெளிப்படுத்திய பிரதமர், வரும் காலங்களில் இதற்கான முயற்சிகள் தொடரும் என்பதையும் சூசகமாக உணர்த்தினார்.
தமிழகத்தின் வளர்ச்சி குறித்துப் பேசிய பிரதமர், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு 14 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். “டபுள் இன்ஜின்” அரசாங்கம் அமையும் பட்சத்தில் திட்டங்கள் விரைவாக மக்களைச் சென்றடையும் என்றும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்றும் அவர் உறுதி அளித்தார். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காகத் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தமிழகத்தில் இரட்டை இயந்திர ஆட்சி அமைந்தால் தமிழர்களின் வாழ்வு பெரும் மேம்பாடு அடையும் என்று கூறி உரையை முடித்தார்.
