தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி விநியோகத்தைச் சீர்குலைப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. “நாங்கள் எண்ணெய் விற்க முடியாத ஒரு பிராந்தியத்தில், வேறு யாரும் எண்ணெய் விற்க மாட்டார்கள்” என்று ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கப் படைகள் அப்பகுதியில் இல்லாத நிலையில்தான் ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், அமெரிக்கா தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப் பாதையில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை, ட்ரோன் அல்லது பிற ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக ஈரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது குண்டுவீசி அழிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த எச்சரிக்கைக்கு ஈரானியப் படைகள் கடுமையான பதிலடி கொடுத்துள்ளன. ஈரானின் மின் நிலையங்கள் அல்லது உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், அமெரிக்கப் படைகளுக்கு அடைக்கலம் தரும் பிராந்திய நாடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.
